இந்தியா

முத்தலாக் அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி

முத்தலாக் அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி

rajakannan

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள முத்தலாக் அவசர சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு, அரசியலமைப்புக்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைஸி கூறியுள்ளார்.

முத்தலாக் முறைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், 3 முக்கிய திருத்தங்களுடன் இந்த முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டிடம் சென்று ஜாமீன் பெறலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அவசர சட்டம் குறித்து அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவராரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், “இந்த அவசர சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. சமத்துவத்தை பேணும் வகையில் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பெண்கள் அமைப்புகள் இந்த அவசர சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். 

இந்த அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. முஸ்லிம் பெண்களுக்கு இந்த அவசர சட்டம் நீதியை பெற்றுத்தராது. இஸ்லாம் மதத்தில் திருமணம் என்பது சமுதாய ஒப்பந்தம். அதில் தண்டனையை ஏற்படுத்துவது தவறானது” என்றார்.