இந்தியா

1400 ஆண்டு கால நம்பிக்கை முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

1400 ஆண்டு கால நம்பிக்கை முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

webteam

அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது எப்படி நம்பிக்கையோ, அதேபோல் முத்தாக் 1400 ஆண்டுகளாக முஸ்லீம்களால் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கை என்று அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்துக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல், முத்தலாக் விவகாரத்தில் அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் (AIMPLB) அமைப்புக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார். தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நரிமன், யு.யு.லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் முத்தலாக் வழக்கு தினசரி விசாரணையாக நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் இன்று ஆஜராகி வாதாடிய கபில் சிபல், வாய்மொழியாக விவாகரத்து செய்வது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது நம்பிக்கை. அதில் எப்படி நீதிமன்றம் குறுக்கிடுவதில்லையோ, அதுபோல முத்தலாக் விஷயத்திலும் நீதிமன்றம் தலையிடக்கூடாது. முத்தலாக் முறை 637 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. அந்த மதநம்பிக்கைக்கு சட்டக்குறுக்கீடு இருக்கக்கூடாது என்றார்.

மேலும், முத்தலாக் முறை குரானில் உள்ளது. அது இறைதூதர் முகமது நபிகள் காலத்திலும், அவருக்கு பின்பும் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற மதங்களுக்கு முன்பே இஸ்லாமில் பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் தனிநபர் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது நீதிமன்றம் முத்தலாக் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று வாதாடினார்.