இந்தியா

மேற்குவங்கம்: கொரோனாவுக்கு எம்எல்ஏ உயிரிழப்பு

webteam

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஃபால்டா தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் தாமோனாஷ் கோஷ். இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல் இவரின் இரு மகள்களுக்கும் மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தாமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாமோனாஷ் கோஷ் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்"மிகவும் வருத்தமாக இருக்கிறது. 3 முறை ஃபால்டா தொகுதி எம்எல்ஏவாகவும், 1998 முதல் கட்சி பொருளாளராகவும் இருந்த தாமோனாஷ் கோஷ், இன்று எங்களை விட்டு பிரிந்துவிட்டார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்களுக்காகவும், கட்சிக்கும் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நல விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆளுநர் ஜகதீப் தங்கர், கோஷின் மறைவுக்கு  தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு அனுபவமிக்க தலைவராக இருந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது மனைவி, இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.