மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன. இந்த நிலையில், மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தில், விதி எண் 267இன்கீழ் மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க I.N.D.I.A கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் நோட்டீஸ் வழங்கினர். இதற்கிடையே, நாடாளுமன்ற விதிகள் மீறப்பட்டது தொடர்பாக பேச அனுமதிக்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கோரிக்கை விடுத்தார்.
அப்போது, ’எந்த விதியின்கீழ் உரிமை பிரச்னை எழுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்’ என ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு டெரிக் ஓ பிரையன், ’விதி எண் 267இன்கீழ் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த ஜூலை 20ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றன’ எனப் பதில் அளித்தார். இதைக் கேட்டு கடும் கோபம் அடைந்த மாநிலங்களவை தலைவர், "அவையில் இருந்து டெரக் ஓ பிரையன் உடனடியாக வெளியேற வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பியூஷ் கோயல், ‘தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அவைத் தலைவரின் வார்த்தைகளுக்குக் கீழ்படியாமல் இருப்பது, அவையில் தொடர்ந்து குழப்பம் விளைவிப்பது போன்ற கட்டுப்படாத காரணங்களால் திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து, டெரிக் ஓ பிரையன் மீதமுள்ள மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக, டெரிக் ஓ பிரையன், "பிரதமர் கடந்த 19 நாட்களாக நாடாளுமன்றத்தில் இருந்து காணாமல் போனதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்கு மட்டும் வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
தவிர, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் வன்முறை குறித்து விதி 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை டெரிக் ஓ பிரையன் மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.