இந்தியா

நாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்

நாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்

webteam

நாடாளுமன்றத்தை மறைமுக கூட்டு சேர்ந்து பாஜகவும், அதிமுகவும் முடக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் விமர்சித்துள்ளார். 

மக்களவை இன்று கூடியபோது, ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க வலியுறுத்தி சில உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்‌. இதேபோல, மேகதாது அணை விவகாரத்தை தமிழக எம்.பிக்கள் எழுப்பினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி சில உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். அமளி நீடித்ததால் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னதாகவும் இரண்டு நாட்களாக அதிமுக எம்பிக்கள் மேகதாது அணை விவகாரத்தை எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது மக்களவை ஒத்திவைப்பட்டது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரைன், “திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்து பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க நினைக்கிறோம். அதற்காக எங்களுக்கு நாடாளுமன்றம் நடக்க வேண்டும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் தமிழக எம்பிக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பாஜக நாடாளுமன்றத்தை நடத்தவிடமால் செய்கிறது. இது மேட்ச் ஃபிக்ஸிங்” என்று அதிமுக எம்பிக்களை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.