மஹுவா மொய்த்ரா ட்விட்டர்
இந்தியா

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்: பெண் எம்.பியின் வழக்கறிஞர் திடீர் விலகல்... பின்னணி என்ன?

அவதூறு வழக்கிலிருந்து மஹுவா மொய்த்ரா வழக்கறிஞர் விலகியுள்ளார்.

Prakash J

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பற்றி வீசும் புதிய புயல்!

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கேள்விகளை வைக்கக்கூடியவர் இவர். குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கேள்விகளை எழுப்பி பெரிதும் கவனம் ஈர்த்தவர்.

மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜகவிற்கு ஆதரவாக நிற்கும் தொழிலதிபர்கள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பி மக்களவையை அனல் பறக்கச் செய்தவர்களில் மஹுவா மொய்த்ராவும் ஒருவர். தவிர, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாகச் செயல்படக்கூடியவர். தற்போது அவரைப் பற்றித்தான் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.

அதன்படி அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இவர் லஞ்சம் வாங்கியுள்ளதாக அவர்மீது புகார் வாசிக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.பியான நிஷிகாந்த் துபே மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் அவர்மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி.. மின்கட்டணம் அதிகரிப்புக்கு இதுதான் காரணமா?

நாடாளுமன்றத்தில் மஹுவா கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு

இதுகுறித்து மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தவிர, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'மக்களவையில் மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள, 61 கேள்விகளில், 50 கேள்விகள், அதானி குழுமம் தொடர்பானவை. அதானி குழுமம் தொடர்பாக இந்த கேள்விகளை எழுப்ப, மற்றொரு நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் உள்ளன' என்று கூறியிருந்தார்.

அது தொடர்பான ஆதாரங்களையும் அவர் இணைத்திருந்தார். புகாரை பரிசீலித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதால் இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு மொய்த்ரா மீதான புகாரை வரும் 26ஆம் தேதியன்று விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா: 20 நாட்களில் அடுத்தடுத்து 5 உறவினர்களைக் கொலைசெய்த 2 பெண்கள்! திடுக்கிடும் தகவல்

குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மஹுவா மொய்த்ரா

அதேநேரத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் இருவர் மீதும் மஹுவா மொய்த்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மஹுவா மொய்த்ரா வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இந்த வழக்கிலிருந்து விலகினார். இதையடுத்து, இந்த வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டெல்லி உயர்நீதிமன்றம்

அவதூறு வழக்கிலிருந்து மஹுவா வழக்கறிஞர் காரணம் என்ன?

இதுகுறித்து வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ’இதுதொடர்பாக எதையும் பேசவிரும்பவில்லை. இந்த வழக்கில் நான் ஆஜராவதற்கு ஜெய் ஆனந்த் மறுப்பு தெரிவித்தார். அதனால் இன்று இந்த வழக்கிலிருந்து விலகினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 'சிம்கார்டுடன் சேலம் மத்திய சிறைக்குச் சென்ற பெண்' - ஷாக் ஆன போலீஸ்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி?

புயலைக் கிளப்பிய விவகாரம்... பிரமாணப் பத்திரம் அனுப்பிவைத்த ஹிராநந்தனி

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் துபாயில் வசிக்கும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி, நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவுக்கு இதுகுறித்து பிரமாணப் பத்திரம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். அதில், ‘அவர் (மஹுவா) எனக்கு அவரது நாடாளுமன்ற வலைதள மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பகிரந்திருந்தார். அதன்மூலம் நான் அவருக்கு தகவல்கள் அனுப்பினேன்.

கடவுச்சொல்லைப் பகிர்ந்ததாக மஹுவா மீது குற்றஞ்சாட்டிய ஹிராநந்தினி

அவர் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பினார். அதானி குழுமம் குறித்து கேள்விகள் எழுப்ப எனக்கு தொடர்ந்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதற்காக எனது கடவுச்சொல்லையும் பகிர்ந்திருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவருக்காக நான் அவரது கணக்கில் நேரடியாக கேள்விகள் கேட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹிராநந்தனி குழுமம் நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது. மேலும், ’எனது கவனம் வணிகத்தில் மட்டுமே உள்ளது. அரசியலுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ என்றும் கூறியிருந்தது.

இதையும் படிக்க: ஒரே சமயத்தில் இரண்டு புயல்: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

ஹிராநந்தனின் பிரமாணப் பத்திரத்திற்குப் பதிலளித்துள்ள மஹுவா மொய்த்ரா

தற்போது ஹிராநந்தனின் பிரமாணப் பத்திரத்திற்குப் பதிலளித்துள்ள மஹுவா மொய்த்ரா, ‘அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்தால் எழுதப்பட்டது. அதில் கையெழுத்திடுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார். அவர்கள், அவரது ஒட்டுமொத்த தொழில்களையும் இழுத்து மூடிவிடுவோம் என்றும் அவரது நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தும், அரசு வழங்கும் அனைத்து தொழில்வாய்ப்புகளும் நிறுத்தப்படும், பொதுத்துறை வங்கிக் கடன்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் மிரட்டியிருப்பார்கள்’ எனக் கூறியுள்ளார்.

’பதில் சொல்லத் தயார்; ஒருபோதும் ஒடுக்க முடியாது’ - மஹுவா

மேலும், “ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரம் ‘லெட்டர்ஹெட்’ இல்லாமல் வெள்ளைத் தாளில் எழுத்தப்பட்டிருக்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “அவரும் (தர்ஷன் ஹிராநந்தனி) தனது தொழிலை காப்பாற்றிக்கொள்ள இப்படிச் செய்திருக்கிறார். இப்படி எல்லாம் செய்து என்னை அச்சுறுத்த முடியாது. அதானி குழுமத்திற்கு எதிராக என் வாயை அடைக்கவே இவ்வாறு முயற்சிக்கின்றனர். ஆனால் ஒருபோதும் ஒடுக்க முடியாது. தொடர்ந்து கேள்விகளை கேட்பேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் நேர்மையாக செயல்படும் குழுவினர் என்னிடம் கேள்வி எழுப்பினால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதானி மீடியாக்களுக்கும், பாஜக ட்ரோல்களுக்கும் பதில் சொல்ல தயாராக இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: “நம்பிக்கை இழக்கவில்லை” - இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தும் என மீண்டும் பதிவிட்ட பாகிஸ்தான் நடிகை!

பதிலுக்கு பாஜக எம்.பி. மீது குற்றச்சாட்டை வைத்த மஹுவா

முன்னதாக, தன் மீது குற்றச்சாட்டை வைத்த ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபேவைக் கடுமையாகத் தாக்கியிருந்தார், மஹுவா. இதுகுறித்து அவர், தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில், ‘மனுவில் பொய் கூறி, போலியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது ஒரு குற்றம்.

இதுகுறித்து எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதிகளா என்பதையும் பார்க்க காத்திருப்போம்’ எனப் பதிவிட்டார். மேலும், அவர், நிஷிகாந்த் துபே தனது வயது மற்றும் பட்டம் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளதாகக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: AUS Vs PAK: ஒரே போட்டியில் ஆஸி. படைத்த பல சாதனைகள்... ருத்ரதாண்டவம் ஆடிய டேவிட் வார்னர்!