மக்களவையில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மகுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டுள்ளார். அதானி மற்றும் பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையிலான கேள்விகளை எழுப்ப, மொய்த்ரா தன்னிடம் பல உதவிகளை கேட்டதாக கட்டுமான தொழிலதிபர் ஹிரா நந்தானி அண்மையில் புகார் கூறியிருந்தார்.
மொய்த்ரா மீது இதேபோன்ற பல புகார்களை பாரதிய ஜனதா கட்சி எம்.பி. நிஷிகாந்த் துபேவும் தெரிவித்தார். இதையடுத்து, நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு முன்பு 31ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க மகுவா மொய்த்ராவுக்கு மக்களவைச் செயலகம் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், 31-ஆம் தேதி தன்னால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் நவம்பர் 5-ஆம் தேதி ஆஜராக அனுமதிக்குமாறும் நன்னடத்தை குழுவிடம் அவகாசம் கேட்டு மகுவா மொய்த்ரா கடிதம் அனுப்பினார்.
எனினும், நவம்பர் 2-ஆம் தேதி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, நன்னடத்தைக் குழு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற நன்னடத்தை குழுவின் முன்பு மொய்த்ரா ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். மொய்த்ரா மீது புகார் கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சி எம்.பி. நிஷிகாந்த் துபே, கடந்த 31-ஆம் தேதி நன்னடத்தை குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன் மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.