விமான நிலைய ஊழியரை காலணியால் தாக்கி சர்ச்சையை ஏற்படுத்திய சிவசேனா எம்பி கெய்க்வாட் இப்போதுதான் வருத்தம் தெரிவித்து அந்தப் பிரச்னையை முடித்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் ஏர் இந்தியா விமானத்தில் தகராறு செய்து அதனால் விமானம் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி டோலா சென் தனது தாயாருடன் அமர்ந்திருந்தார். அப்போது விமானத்தின் அவசர வழி அருகே உள்ள இருக்கையில் இருந்து வேறு இருக்கையில் மாறி அமருமாறு எம்.பியின் தாயாரை விமான பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.பி டோலா சென் விமான பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளார். பாதுகாப்பு விதிமுறைகளை எம்.பி பின்பற்ற மறுத்ததால் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.