இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவுடன் பயங்கர கைகலப்பு - திரிணமூல் எம்எல்ஏ மூக்கு உடைந்தது!

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவுடன் பயங்கர கைகலப்பு - திரிணமூல் எம்எல்ஏ மூக்கு உடைந்தது!

ஜா. ஜாக்சன் சிங்

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் பாஜக - திரிணமூல் காங்கிரஸுக்கு இடையே பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவின் மூக்கு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாது ஷேக். திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த வாரம் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அந்த கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கடந்த 22-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அந்தப் பகுதியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதன் ஒருபகுதியாக, அங்குள்ள குடிசை வீடுகளுக்கு சிலர் தீ வைத்தனர். இதில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களே இந்தக் கொலை சம்பவத்துக்கு காரணம் என எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இதனிடையே, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

எம்எல்ஏக்கள் மோதல்

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை இன்று கூடியதும், 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் பாஜக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, பாஜக - திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் திரிணமூல் எம்எல்ஏ ஆசித் மஜும்தாரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி தன்னை தாக்கியதாக ஆசித் மஜும்தார் தெரிவித்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி சுவேந்து அதிகாரி உட்பட பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களில் இருந்து நடப்பாண்டு முழுவதும் சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதனிடையே, எம்எல்ஏக்கள் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.