இந்தியா

மேற்கு வங்கம்: திரிணாமூல் காங்கிரஸ்191; பாஜக 97 இடங்களில் முன்னிலை

மேற்கு வங்கம்: திரிணாமூல் காங்கிரஸ்191; பாஜக 97 இடங்களில் முன்னிலை

JustinDurai

மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக இடையே முன்னிலையில் போட்டி நிலவுகிறது. 

மேற்கு வங்கம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 191 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் பாஜக 97 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க தேர்தல் பின்புலம்: தமிழகத்தை போல மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலும் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலம் மேற்கு வங்கம். இங்குள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 294. தமிழகத்தை போல் அரசியல் நிலைத்தன்மை மிக்க வெகுசில மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். கடந்த 70 ஆண்டுகளில் 8 முதல்வர்களை மட்டுமே இந்த மாநிலம் கண்டுள்ளது என்பது இதற்கு ஒரு உதாரணம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு தொடர்ந்து 23 ஆண்டுகள் இங்கு ஆட்சி புரிந்தது பெரிய சாதனை. சுமார் 34 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்புக் கோட்டையாக திகழ்ந்த மேற்கு வங்கத்தை 2011ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரசின் துளிர்க்கும் புல் மற்றும் மலர் சின்னத்தைக் கொண்டு தகர்த்தார் மம்தா பானர்ஜி.

எளிமையான தோற்றத்துடன் வங்கத்தை தொடர்ந்து 10 ஆண்டுகள் தன் பிடிக்குள் வைத்திருக்கும் மம்தாவிற்கு பாரதிய ஜனதா இந்த தேர்தலில் மிகப்பெரிய சவாலாக எழுந்தது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்ட பாஜக, அடுத்து மேற்கு வங்கத்தை குறிவைத்து நகர்த்தியது. 2011 தேர்தலில் மேற்கு வங்க பேரவையில் ஒரு இடம் கூட பெறாத பாஜக 2016 தேர்தலில் 3 இடங்களை பெற்றது. 2019 மக்களவை தேர்தலில் 18 இடங்களை பிடித்து மேற்கு வங்கத்தின் இரு பிரதான கட்சிகளில் ஒன்றாகவும் மாறியது.

இந்நிலையில்த் தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பிடித்து நிச்சயம் ஆட்சியை பிடிப்போம் என திட்டவட்டமாக கூறியது பாஜக. ஆனால் மேற்கு வங்கத்தின் மகளான தன்னைத்தான் மக்கள் மீண்டும் தேர்வு செய்வார்கள் என உறுதிபட கூறிவந்தார் முதல்வர் மம்தா. திரிணமூல் காங்கிரசும் பாஜகவும் அனல் பறக்க மோதிய நிலையில், காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் அணியும் 3ஆவது அணியாக பல தொகுதிகளில் சவாலை தந்தது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் வலிமை வாய்ந்த இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் அரசியல் போரின் முடிவு எப்படி இருக்கும் என்பதை நாடே ஆர்வத்துடன் கவனித்து வந்தது.