இந்தியா

“நீட் தேர்வால் சம்பாதிக்கும் கோச்சிங் செண்டர்கள்” - மாநிலங்களவையில் திருச்சி சிவா

webteam

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்த முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் அவர்களில் வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர் என்றும், இந்த 6 லட்சம் பேரும் தனியாக கோச்சிங் சென்டர்களுக்கு சென்றவர்கள் எனவும் திருச்சி சிவா சுட்டிக்காட்டினார்

இந்த கோச்சிங் சென்டர்களுக்கு ஒரு மாணவருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள் என்றால் 12 ஆயிரம் கோடி ரூபாய் இந்த கோச்சிங் சென்டர்கள் நீட் தேர்வை வைத்து சம்பாதிக்கிறார்கள் எனத் தெரிவித்தார். 

இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத ஏழை எளிய மாணவர்கள் இந்த நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரிழந்திருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

எனவே தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கக்கூடிய இரண்டு தீர்மானங்களை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார்.