காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் உயிரிழந்த நிலையில், ராணுவ வீரர் கவிதை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களின் வாகனம் புல்வாமா மாவட்டத்தின் அவாந்திபோரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 350 கிலோ வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த கார், சி.ஆர்.பி.எஃப். பேருந்து மீது மோதியது. அப்போது 350 கிலோ வெடிப்பொருட்களும் வெடித்து சிதறியது. மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பேருந்தில் பயணித்த 76-வது பட்டாலியனைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று முதல் சமூகவலைதளங்களில் இராணுவ வீரர் கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. அந்த கவிதை:
“நான் போர்களத்தில் மடிந்தால் என்னை சவப்பேட்டியில் அடைத்து வீட்டுக்கு அனுப்புங்கள்.
என் நெஞ்சுமீது பதக்கங்களை அணிவித்து
என் தாயிடம் நான் என்னால் முடிந்த அளவிற்கு தேசத்திற்காக சிறப்பாக பணியாற்றினேன் என்று கூறுங்கள்
என் அப்பாவிடம் சொல்லுங்கள் இனிமேல் என்னால் அவருக்கு தொல்லை இருக்காது என்று
என் சகோதரனிடம் அவனை நன்றாக படிக்க சொல்லுங்கள்
என் வண்டியின் சாவி இனி நிரந்தரமாக உனக்குதான் என்றும் கூறுங்கள்
என் சகோதரியிடம் உன் சகோதரன் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நீண்ட ஒய்வு எடுத்துகொண்டிருக்கிறான் என்று சொல்லுங்கள்
என் நாட்டு மக்களிடம் இறுதியாக அழவேண்டாம் என்று கூறுங்கள்
ஏனென்றால் நான் நாட்டிற்காக இறக்க பிறந்த ராணுவ வீரன்.”
சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த கவிதை அனைவரின் மனதையும் நெருடவைத்துள்ளது.