இந்தியா

டிக்கெட் எடுக்காத ரயில் பயணிகள்.. அபராத வசூலில் சாதனை படைத்த மும்பை ரயில்வே கோட்டம்

webteam

“மும்பை கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ. 100 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ரயில்வே துறையும் ஒன்று. மக்களின் போக்குவரத்துக்கு முதன்மையானதாக இருக்கும் ரயில்வே துறை, பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ரயில்வேயும் ஒன்றாக உள்ளது. இது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்தில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய ரயில்வேயில் இந்த சாதனையைப் படைத்த முதல் பிரிவு என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இந்த அபராதத் தொகை மும்பை கோட்டத்தில் உள்ள புறநகர், விரைவு என அனைத்தும் ரயில்களிலும் டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகும்.

2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி மாதம் வரை 18 லட்சம் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து, இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்த தொகை 60 கோடி ரூபாயாக இருந்தது. குளிரூட்டப்பட்ட உள்ளூர் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 25,781 பயணிகளிடம் இருந்து ரூ. 100 கோடி அபராதமும், முதல் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 1.45 லட்சம் பயணிகளிடமிருந்து ரூ.5.05 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 77 ரயில் நிலையங்கள் உள்ள மும்பை கோட்டத்தை, 1,200 பயண டிக்கெட் பரிசோதகர்கள், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர், “எங்களுக்கு இலக்கு என்று எதுவும் இல்லை. பயணச்சீட்டு சரிபார்ப்பின் மூலம், பயணிகளுக்கு ஒரு நல்ல வசதியை ஏற்படுத்தித் தருகிறோம். சில சமயங்களில் பயணச்சீட்டு பெற்றவர்கள், டிக்கெட் இல்லாத பயணிகளால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து அடிக்கடி புகார் வந்தது.

இதையடுத்தே இந்தச் சோதனையை தீவிரப்படுத்தினோம். இந்த அளவுக்கு வசூல் ஆனது ஒரு சாதனைதான். டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்களை மத்திய ரயில்வே எச்சரித்து வருகிறது. ஆனால் பயணிகள் அதைப் புறக்கணித்ததால்தான் இவ்வளவு பெரிய தொகை வசூலாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.