ஜம்மு தாவி சீல்டா எக்ஸ்பிரஸ் ட்விட்டர்
இந்தியா

பீகார்: சிக்னலை மீறி வேறு பாதையில் 2 கி.மீ. தூரம் ஓடிய ரயில்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

ஜம்முவில் இருந்து சீல்டாவுக்கு இயக்கப்பட்ட ஜம்மு தாவி சீல்டா எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னலைத் தாண்டி ஓடியதால் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Prakash J

ஜம்முவிலிருந்து சீல்டாவுக்கு ஜம்மு தாவி சீல்டா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரயில், கடந்த ஜூலை 30ஆம் தேதி காலை 7.07 மணியளவில் பீகார் கைமூர் பாபுவா ரயில் நிலையம் அருகே சென்றபோது, சிவப்பு சிக்னல் போடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிக்னலையும் மீறி இந்த ரயில் 2 கிலோ மீட்டருக்குத் தூரத்துக்கு வேறு பாதையில் ஓடியுள்ளது. அந்த ரயில், பாபுவா நிலையத்தின் நடைபாதை எண் 3இல் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிவப்பு சிக்னலையும் மீறி ரயில் வேறு பாதையில் சென்றுள்ளது.

ரயில் வேறு பாதையில் சென்றதால், பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டு, சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து பைலட் உடனடியாக பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக மற்றொரு ரயில் அந்தப் பாதையில் வராததால் ஆபத்து எதுவும் நிகழவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், ரயில்வே லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் மீது நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம் அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், ரயிலை இயக்குவதற்கு வேறு பைலட்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த திடீர் சம்பவத்தால் பயணிகள் 3 மணி நேரம் தாமதம் அடைந்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா அருகே அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய விபத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த விபத்தில் 293 பேர் பலியானதாகவும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், ‘சிக்னல்கள் கோளாறு காரணமாக இந்த ரயில் விபத்து ஏற்பட்டது’ என இந்திய ரயில்வே வாரியமும் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.