உத்தரப்பிரதேசத்தில் உட்கல் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே பூரி-ஹரித்வார்-கலிங்கா உட்கல் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்த விபத்து குறித்து ரயில்வே மூத்த அதிகாரி அனில் சக்சேனா, இந்த விபத்து இன்று மாலை 5.30 மணிக்கு நிகழ்ந்தது. பலர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், மீட்புப் பணிகளை நான் கண்காணித்து வருகிறேன். மூத்த அதிகாரிகளை விரைந்து விபத்து பகுதிக்குச் சென்று, மீட்புப் பணிகள் கவனிக்க உத்தரவிட்டுள்ளேன். மருத்துவ வாகனங்கள் விரைந்துள்ளன என்று கூறியுள்ளார்.
இந்த விபத்தில் 15 முதல் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் மற்ற பயணிகளை மாற்று வாகனங்களில் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயிவே வட்டாரங்கள் கூறுகின்றன.