model image x page
இந்தியா

இனி, செல்போன் நம்பருக்கும் கட்டணம்.. அரசுக்கு டிராய் பரிந்துரை!

Prakash J

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் செல்போனும் ஒன்றாகிவிட்டது. அதில் சிலர் சாப்பாடு இல்லாமல்கூட இருந்துவிடுகிறார்கள். ஆனால், செல்போன் இல்லாமல் இருப்பதில்லை.

இந்த நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அப்படியான செல்போனைப் பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செல்போன் எண்களை ஒரே நபர் தொடர்ந்து பல ஆண்டுகள் வைத்துக்கொள்ள தனிக் கட்டணம் விதிக்கவும், பயன்படுத்தாத எண்ணைத் துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள் தற்போது செல்போன்களில் பேச ரீசார்ஜ் செய்துகொள்வதுபோல இனி செல்போன் எண்களை நீண்டகாலம் தொடர்ந்து பயன்படுத்தவும் தனி கட்டணம் வசூலிக்க டிராய் புதிய திட்டம் தீட்டியுள்ளது.

உதாரணமாக 2 சிம்கார்டுகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி சிலர் பயன்படுத்தும் நிலையில், மற்றொரு எண்ணை குறைவாகவே பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த பயன்பாட்டில் உள்ள எண்களை வேறு நபருக்கு ஒதுக்காமல் இருக்க தனிக்கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசிடம் டிராய் பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிக்க: ’சொன்னது இதுதான்..’ மேடையில் அமித் ஷா கண்டித்ததாக வைரல் ஆன வீடியோ.. விளக்கமளித்த தமிழிசை!

புதிய டெலிகாம் சட்டம் கடந்தாண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தனிக்கட்டணம் விதிக்கவும் டிராய் புதிய பரிந்துரை அளித்துள்ளது. அப்படி தனிக்கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் அதனை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்தே வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் இப்படி தனிக்கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் இருப்பதாக டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் இத்தகைய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சிக்கிம்| நேற்று எம்.எல்.ஏவாக பதவியேற்பு.. இன்று ராஜினாமா.. முதல்வர் மனைவி அதிரடி!