model image freepik
இந்தியா

ம.பி: ஆற்றில் விழுந்த தோழியின் நாய்: காப்பாற்ற நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கரையேறிய நாய்!

மத்தியப் பிரதேசத்தில் நாயைக் காப்பாற்ற அணைக்குள் குதித்த பட்டதாரி இளைஞர் பலியான நிலையில், நாய் நீந்தி கரையேறிய சம்பவம் ஒருபக்கம் ஆச்சர்யத்தையும் மறுபக்கம் துயரத்தையும் அளித்துள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் கெர்வா பகுதியைச் சேர்ந்தவர் சரள் நிகாம். 23 வயது நிரம்பிய இந்த இளைஞர், போபால் என்ஐடியில் பிடெக் பட்டம் பெற்றவர். இவர், யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர், சம்பவத்தன்று (ஜன.3) தனது பெண் தோழிகளுடன் வனப்பகுதிக்குள் இருக்கும் கெர்வா அணைக்குச் சென்றுள்ளார். அப்போது அணைப் பகுதியை அனைவரும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பெண் தோழி ஒருவரின் வளர்ப்பு நாய் அணைக்குள் விழுந்துவிட்டது. அதனைக் காப்பாற்ற, அனைவரும் முயற்சி செய்துள்ளனர். இதற்காக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி அணைக்குள் இருந்த நாயை மீட்க முயன்றுள்ளனர். அப்போது சரளின் கைப்பிடி நழுவி அணைக்குள் விழுந்துள்ளார். இதில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவரைக் காப்பாற்ற அனைவரும் முயன்றுள்ளனர். ஆனால், அந்த முயற்சி பலன் தரவில்லை.

moedl image

இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், 3 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி, 10 அடி ஆழத்தில் இருந்த அந்த இளைஞரின் உடலை வெளியே எடுத்தனர். அவரின் உடலை வெளியே எடுத்தபோது, ​​முகத்தில் காயங்கள் இருந்தன. முதற்கட்ட விசாரணையில், அவர் கல்லிலோ அல்லது புதரிலோ சிக்கி காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சரளின் மரணச் செய்தி கேட்டு அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வழக்கில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரத்தில் அணையில் தவறி விழுந்த நாய், நீந்தி கரையேறியது ஒருபக்கம் ஆச்சர்யத்தையும், மறுபக்கம் துயரத்தையும் ஏற்படுத்தியது.