மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகசங்களைக் காண, பொதுமக்கள் லட்சக் கணக்கானோர் நேற்று திரண்டனர். வெயில் சுட்டெரித்ததாலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட்டநெரிசல் நிலவியதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் பல பேர் மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை,அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன், பெருங்களத்தூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 90க்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றன. திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கூட்டநெரிசலில் இறந்த திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்தார். கார்த்திகேயன் உயிரிழந்ததது தொடர்பாக அவரது மனைவி சிவரஞ்சனி கூறுகையில்,
”என் கணவர் 100% உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார். இப்படி ஒரு சோகமான சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதில் இருந்து எப்படி மீள போகிறோம் என்று தெரியவில்லை. எனக்கு இரண்டு வயது குழந்தை இருக்கிறது இனிமேல் என் வருமானத்தை நம்பித்தான் குடும்பம் நடத்த வேண்டும். எனவே அரசு நிதி உதவி அல்லது அரசு வேலை வழங்க வேண்டும்.
என் கணவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்களை நிற்க சொல்லிவிட்டு பார்க்கிங் பகுதிக்கு பைக் எடுப்பதற்காக சென்றார். அதற்குள் மயங்கி விழுந்துள்ளார். அவரை ஆம்புலன்ஸில் வைத்திருந்தனர். சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டதாக சொன்னார்கள்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.