இந்தியா

டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை

டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை

kaleelrahman

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில் வதந்திகள் பரப்ப பாகிஸ்தானில் இருந்து சுமார் 300 ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தகட்டமாக குடியரசு தினமான நாளை அங்கு பதற்றம் நிறைந்த சூழலில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. இச்சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் துறையின் உளவுப்பிரிவு சிறப்பு பிரிவு ஆணையர் தீபேந்திர பதக், கடந்த 13ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை பாகிஸ்தானிலிருந்து 300 ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் டிராக்டர் பேரணியில் தவறான தகவல்களை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் கூறினார்.


இந்த ட்விட்டர் கணக்குகளை காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் தீபேந்திர பதக் கூறினார். குடியரசு தின அணிவகுப்பு முடிவடைந்த பின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் எனினும் இப்பேரணியை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடத்துவது சவாலான பணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இப்பேரணியை அமைதியாக நடத்த பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச காவல் துறையுடன் இணைந்து விரிவான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் தீபேந்திர பதக் கூறினார்.

டெல்லியில் நாளை நடக்கவுள்ள பேரணியில் பங்கேற்பதற்காக சுமார் 13 ஆயிரம் டிராக்டர்கள் தற்போதே நகரின் 4 எல்லைப்பகுதிகளில் அணிவகுத்து நிற்பதாகவும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் டெல்லி எல்லையில் தன்மீது அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் தன் வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி.ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பேரணி நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். மும்பை ஆசாத் மைதானத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்துள்ள நிலையில் அவர்கள் இன்று ஆளுநரிடம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மனு கொடுக்க உள்ளனர்