சென்னை மாங்காடு அருகே பரணிபுத்தூரில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பாராளுமன்றத்தை திறந்து விட்டார்கள். அடுத்தடுத்து தேர்தல் பணியை செய்யவுள்ளனர். வரவுள்ள தேர்தலில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இணைந்து கூட்டம் நடத்த உள்ளனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற கட்டட துவக்க விழாவில் பாஜக-வினரும், சாமியார்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்ட ரீதியாக யார் தலைவர் என்பது கூட தெரியாமல் மோடி ஆட்சி செய்து வருவது கவலை அளிக்கிறது. நரேந்திர மோடி ஜனநாயக நாட்டில் தலைவராக விரும்பவில்லை. இதனால் அதிகாரத்தை தானே வைத்துக் கொள்ள விரும்புகிறார். வரலாற்றில் அவர் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக பெயர் பலகையில் அவர் பெயர் மட்டும் உள்ளது” என்றார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “வரும் தேர்தல் சாதாரணமாக இருக்காது. பாஜக எல்லா அயோக்கியத்தனம், அராஜகமும் செய்யும். அதற்கு எடுத்துக்காட்டு தான் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி.ரெய்டு. தேர்தலில் பாஜக அளிக்கும் வாக்குறுதி எடுபடாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களை சந்திக்கும் ஒரே கட்சி திமுகதான். அனைத்துக் கட்சியும் ஒன்றாக எதிர்த்து நின்றாலும் திமுக வெற்றிபெறும். தொண்டர்கள் தலைமை கூறுவதை செய்ய வேண்டும்” என்றார்.