இந்தியா

ஊழியரிடம் தன் காலணிகளை கையில் எடுத்துவர கூறினாரா அமைச்சர் ரோஜா?வைரல் வீடியோவுக்கு விளக்கம்

ஊழியரிடம் தன் காலணிகளை கையில் எடுத்துவர கூறினாரா அமைச்சர் ரோஜா?வைரல் வீடியோவுக்கு விளக்கம்

சங்கீதா

நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில், அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். வழக்கமாக தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து, அவர் செய்யும் விஷயங்கள் வைரலாகும். குறிப்பாக கபடி விளையாடுவது, நடனம் ஆடுவது என சமூகவலைத்தளங்களில் வைரலாவது வழக்கமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் சுற்றுலா துறை அமைச்சர் என்ற முறையில் தன்னுடைய துறை தொடர்பான அபிவிருத்தி பணிகளை பார்வையிட, ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சூரியலங்கா கடற்கரைக்கு நேற்று சென்று இருந்தார் ரோஜா. அப்போது செருப்பு காலுடன் கடற்கரை மணலில் நடப்பது அவருக்கு சிரமமாக இருந்ததாக தெரிகிறது. இதனால், கடற்கரையில் ஓரிடத்தில் தன்னுடைய காலணிகளை கழற்றி விட்டுவிட்டு, கடல் நீரில் இறங்கினார்.

அதன்பின் பார்த்தபோது அந்த இரண்டு காலணிகளும் ஊழியர் ஒருவரின் கையில் இருந்தன. கடற்கரையில் காலணிகளை கழற்றிவிட்ட ரோஜா, தனது காலணிகளை தூக்கி வருமாறு ஊழியரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. `சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடிகையாக வளர்ந்து, எம்.எல்.ஏ.வாக உயர்ந்து தற்போது அமைச்சராக இருக்கும் அவர், இதுபோல் செய்யலாமா’ என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவரிடமிருந்து இதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் வைரலானதையடுத்து, நடிகை ரோஜாவின் காலணிகளை கையில் எடுத்துவந்தவரும், சூரியலங்கா கடற்கரை ரிசார்ட்டின் தூய்மை பராமரிப்பு ஊழியர் என்றுக் கூறப்படும் சிறுத்யோகி சிவ நாகராஜு விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “அமைச்சரின் காலணிகளை எடுத்துவருமாறு என்னிடம் யாரும் கூறவில்லை. கடல்நீரில் அந்த காலணிகள் அடித்து செல்லப்பட்டுவிடும் என நினைத்ததாலேயே, அதனை ஓரமாக வைப்பதற்காக கையில் எடுத்து வந்தேன். ஆனால் இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.