இந்தியா

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளுக்கு உறுப்பு வளர்ச்சி ஊசி : திடுக்கிடும் தகவல்

webteam

பாலியல் தொழிலுக்காக கொடுமைப்படுத்தப்பட்ட 11 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டனர்.

தெலுங்கானா மாநிலத்தின் யாதத்ரி போங்கிர் மாவட்டத்தில் உள்ள யாதகிரிகுட்டா பகுதியில் சிலர் பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அத்துடன் அந்த வீடுகளில் இருந்து சிறுமிகள் அலறும் சத்தம் வருவதாகவும், அங்கு சிறுமிகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு தனிப்படையை ஆணையர் மகேஷ் பகவத் அமைத்துள்ளார். அந்தத் தனிப்படையினர் யாதகிரிகுட்டா பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, ரகசியமாக இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில் கல்யாணி (25) என்ற பெண்ணின் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் அங்கிருந்த இரண்டு சிறுமிகளை மீட்டுள்ளனர். அதில் ஒரு குழந்தை கல்யாணியின் குழந்தையாகும். மற்றொரு குழந்தையை பாலியல் இடைத்தரகர் ஒருவரிடமிருந்து காசு கொடுத்து வாங்கியதாக கல்யாணி தெரிவித்துள்ளார்.

பின்னர் கல்யாணி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அதே பகுதியில் இருந்த மேலும் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 வயது மற்றும் 4 வயது உட்பட மொத்தம் 11 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 5 வீடுகளில் இருந்தும் பாலியல் தொழில் செய்து வந்த அனிதா (30), சுசிலா (60), நர்சிம்மா (23), ஸ்ருதி (25), சரிதா (50), வாணி (28), வம்ஸி (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர்கள் கிருஷ்ணா ஷங்கர் மற்றும் யாதகிரி என்ற இடைத்தரகர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை ரூ.2 லட்சம் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். இதுதவிர ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் சுற்றித்திரிந்த சிறுமிகளையும் பிடித்து வந்துள்ளனர். அந்தச் சிறுமிகளுக்கு இவர்கள் பாலியல் கொடுமைகள் கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் விரைவில் வளர்ச்சியடைந்து பாலியல் தொழிலுக்கு தயார் ஆவதற்காக, உறுப்புகள் வளர்ச்சியடையும் ஊசி போட்டுள்ளனர். ஊசிகளை சுவாமி என்ற மருத்துவர் போட்டுள்ளார். ஒரு சிறுமிக்கு ஒரு ஊசி போடுவதற்கு அவர் கட்டணமாக ரூ.25 ஆயிரம் பெற்றுள்ளார். இதுதவிர பாலியல் தொழிலில் ஈடுபட மறுக்கும் சிறுமிகளை அவர்கள் உணவு இன்றி கொடுமை செய்துள்ளனர். 

இந்தக் கும்பலை பிடித்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசிய குற்றப்பதிவின் தகவல்படி, 2016ஆம் ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழில் வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 23 ஆயிரம் பெண்கள் மற்றும் 182 வெளிநாட்டுப் பெண்கள் பாலியல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழில் வழக்குகளில், பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் 15,379 பேர் ஆவர். இவர்களில் 9,034 பெண்கள் 18 வயதுக்குள் கீழ் உள்ளவர்கள். ஒரு நாளைக்கு மட்டும் 63 பெண்கள் பாலியல் கும்பலிடம் இருந்து இந்தியாவில் மீட்கப்படுகின்றனர்.