சிறந்த முதலமைச்சர்கள் புதிய தலைமுறை
இந்தியா

சிறந்த மாநில முதலமைச்சர்கள் பட்டியல் | யார் முதலிடம்? தமிழ்நாடு முதல்வருக்கு எந்த இடம்?

மக்கள் விரும்பும் தலைவர் யார்? என்பது தொடர்பான கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி 49 சதவீதத்துடன் முதலிடத்தில் தொடர்கிறார். இது மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பைவிட 6 சதவீதம் குறைவாகும்.

PT WEB

சிறந்த மாநில முதலமைச்சர்கள் பட்டியலில் அசாம் முதலமைச்சர் முதலிடத்தையும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 5வது இடத்தையும் பிடித்துள்ளதாக இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய இந்தியா டுடே குழுமம், MOOD OF THE NATION என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவைத் தேர்தலில் 293 இடங்களை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, தற்போது தேர்தல் நடந்தால் கூடுதலாக 6 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், I.N.D.I.A. கூட்டணி ஒரு இடத்தை இழக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி வாரியாக பார்க்கும்போது பாஜக, மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட கூடுதலாக 4 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்கள் விரும்பும் தலைவர் யார்?.

மக்கள் விரும்பும் தலைவர் யார்? என்பது தொடர்பான கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி 49 சதவீதத்துடன் முதலிடத்தில் தொடர்கிறார். இது மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பைவிட 6 சதவீதம் குறைவாகும். அதேநேரத்தில், ராகுல்காந்தி 22 புள்ளி 4 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். அவருக்கு 8 சதவீதம் மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள்

நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் குறித்து இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா 51 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த கருத்துக்கணிப்பைவிட 13 சதவீத அதிக ஆதரவை பெற்று 46 சதவீதத்துடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2வது இடத்திலும், குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் 44 சதவீத மக்கள் ஆதரவுடன் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 சதவீத ஆதரவுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 39 சதவீத ஆதரவுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடும்போது 12 சதவீத மக்கள் ஆதரவு யோகி ஆதித்ய்நாத்துக்கு குறைந்திருப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.