இந்தியா

புதிய அமைச்சரவை குறித்து இன்று ஆலோசனை

webteam

டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது

17வது மக்களவைக்கு தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இதனை அடுத்து பிரதமர் மோடி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்க இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்திருக்கிறது. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட‌ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு யாரெல்லாம் அமைச்சர் பதவி வகிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து பாரதிய‌‌ ஜனதா தலைமை முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று மாலை மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரவை மற்றும் 16வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் முறைப்படி நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி மக்களவையை கலைப்பதற்கான தீர்மானத்தை வழங்கினார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைவரும் அப்போது உடன் இருந்தனர்.