இந்தியா

“உணவில் விஷம் கலந்து எனக்கு கொடுக்கப்பட்டது”-இஸ்ரோ மூத்த விஞ்ஞானி பரபரப்பு குற்றச்சாட்டு

“உணவில் விஷம் கலந்து எனக்கு கொடுக்கப்பட்டது”-இஸ்ரோ மூத்த விஞ்ஞானி பரபரப்பு குற்றச்சாட்டு

JustinDurai

3 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ தலைமையகத்தில் வைத்து தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக இஸ்ரோவின் உயர்மட்ட விஞ்ஞானி குற்றம்சாட்டியுள்ளார். 

இஸ்ரோவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர், தபான் மிஸ்ரா. இதற்கு முன்பாக இஸ்ரோவின் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். இவர், விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது, இஸ்ரோ மெரிட் விருது உள்ளிட்ட விருதுகள் பெற்ற சிறந்த விஞ்ஞானி ஆவார்.

இந்நிலையில் தபான் மிஸ்ரா  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘Long Kept Secret’ என்ற தலைப்பில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின்போது, தனக்கு ஆபத்தான ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷத்தை தோசை மற்றும் சட்னி உடன் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதனை உட்கொண்ட பின்பு கடுமையான சுவாசக் கோளாறு, அசாதாரண தோல் வெடிப்புகள் மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட  பிரச்னைகளால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜூலை 2017-ல் உள்துறை பாதுகாப்புப் பணியாளர்கள் தன்னை சந்தித்து, தனக்கு ஆர்சனிக் விஷம் கொடுக்கப்பட்டது குறித்து தகவல் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ள மிஸ்ரா, அதன்பின்னர்தான் மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

தனக்கு விஷம் அளிக்கப்பட்டதன் நோக்கம் உளவு தாக்குதலாக இருக்கலாம் எனவும், ராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட நடவடிக்கைக்குக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கும் ஒரு விஞ்ஞானியை பயணத்தில் இருந்து அகற்றுவது முக்கிய நோக்கமாக இருந்திருக்கலாம் எனவும் உதாரணமாக சிந்தடிக் அபர்சர் ரேடார் போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ளவர்கள் அவர்களது இலக்கில் இருந்திருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டினார். 

இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் இஸ்ரோவிலும், மேலும் பல அதிகார வட்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்குமாறு மிஸ்ரா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மிஸ்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ தரப்பிலிருந்து பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.