குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ட்விட்டர்
இந்தியா

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரை!

கணபதி சுப்ரமணியம்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இன்று முதன்முறையாக கூட்டுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் நரேந்திர மோடி அரசு தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் அமல்படுத்த திட்டமிட்டிருக்கும் திட்டங்களை குடியரசுத் தலைவர் கோடிட்டு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி வருவதால், இதுதொடர்பான அம்சங்கள் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறலாம் என பாஜக எம்.பிக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் அரசியல் ரீதியான பல்வேறு சர்ச்சைகளுக்கு சூசகமாக விளக்கம் அளிக்கும் வகையிலும், பல்வேறு துறைகளில் மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்களின் தாக்கம் குறித்தும் குடியரசுத் தலைவர் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரம், அக்னிவீர் விவகாரம், ரயில்வே விபத்துகள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்ப உள்ளனர்.