Morning Headlines PT Web
இந்தியா

தலைப்புச் செய்திகள் | 4ம் கட்ட மக்களவை தேர்தல் முதல் சேப்பாக்கத்தில் CSKவின் 50-வது வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது 4-ம் கட்ட மக்களவை தேர்தல் முதல் சேப்பாக்கத்தில் 50-வது வெற்றியை பதிவுசெய்த CSK வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது

PT WEB

“மேற்கு வங்கத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்” எனக்கூறி திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இளைஞர்களை கட்டையால் தாக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

“முத்தலாக், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?” என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஆட்சிக்கு வந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் பலன்கள் சமமாக பகிர்ந்து தரப்படும்” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி

கர்நாடகா எம்.பி. பிரஜ்வல் மீதான பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த விவகாரத்தில், ஆபாச படங்களை பரப்பியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சராக ஆண்ட்ரி பெலோசோவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்கு பாதுகாப்பு கவுன்சிலுக்கு மாற்றம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கோதுமை விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. இதன்மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்திய சூப்பர் கிங்ஸ். மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்தது.

RR vs CSK

1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் புதிய தேசிய சாதனை படைத்தார் இந்திய தடகள வீராங்கனை தீக்சா. அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் இருந்த நாகை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பொறுப்பு வகிக்தவர் எம்.செல்வராஜ் (67) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்டமாக இன்று 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் தேர்தல் தொடங்கியது

மத்தியில் I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியாவின் பகுதிகள் மீட்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

தருமபுரி மாவட்டத்தில் பட்டியலின சிறுவனுக்கு சிகை அலங்காரம் செய்ய மறுத்த, கடை உரிமையாளரையும், அவரது தந்தையையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை விவகாரத்தில், ஏறக்குறைய துப்பு துலங்கிவிட்டது என காவல்துறை தெரிவித்திருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் வெடி விபத்து நிகழந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்

தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட தனது கணவரை உயிருடன் மீட்டுத் தரவேண்டும் என யூடியூப் சேனல் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி வலியுறுத்தியுள்ளார்.

அவதூறு வழக்கு ஒன்றில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கபட்ட சம்மன் சரியானதே என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டுவழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால், மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்

சுமத்ரா தீவு பகுதியில் பெரும் நிலச்சரிவு

மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியின் மக்களுக்கான நினைவுப் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் ஒரு வீட்டில் 32 கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.