நேற்று டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்தரதின விழா நிகழ்ச்சியில், மக்களவை தலைவர் ராகுல்காந்தி கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அமரவைக்கப்பட்டிருந்தார். இது பாஜக அரசின் காழ்ப்புணர்வை காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் வீரர்களை கவுரவப் படுத்துவதற்காக ராகுலை பின்வரிசையில் அமரவைத்ததாக பாதுகாப்புத்துறை அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல. கேபினட் அமைச்சர்கள் முன்வரிசையில் அமர்ந்திருக்கும்போது, அதற்கு இணையான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் ராகுலுக்கு, கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கியது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை.
மக்களவையில் மிகுந்த எழுச்சியோடு ராகுல் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டுள்ளது.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.