மஹுவா மொய்த்ரா புதிய தலைமுறை
இந்தியா

மஹுவா மொய்த்ராவுக்கு புதிய பொறுப்பு.. ஆதரவுக்கரம் நீட்டிய திரிணாமுல்! மம்தாவின் திட்டம் என்ன?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு, அக்கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Prakash J

மக்களவையில் பேச பணம் பெற்ற விவகாரம்:

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்க, அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விவகாரத்தை விசாரித்தது.

மஹுவா மொய்த்ரா

நவம்பர் 2ஆம் தேதி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த மஹுவா மொய்த்ரா, பாதியிலேயே வெளியேறியதுடன், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரிகமான கேள்விகளை எழுப்புவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், உண்மையான கேள்விகளுக்குப் பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணைபோனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையும் படிக்க: ஒடிசா: தனக்காக சிறை சென்ற காதலனை காத்திருந்து திருமணம் செய்த பெண்.. பெற்றோர் கொடுத்த விநோத தண்டனை!

மஹுவாவிடம் மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை!

மேலும், எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கை, கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மொய்த்ரா, ’நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக நெறிமுறைகளற்ற முறையில், மக்களவை நெறிமுறைக் குழுவால் வெளியேற்றப்பபடும் முதல் நபர் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ எனக் கூறியிருந்தார்.

”என்னை ஒன்றும் செய்ய இயலாது” - மஹுவா

முன்னதாக,இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மஹுவா மொய்த்ரா, ”நடப்பு மக்களவையில் இருந்து என்னை வெளியேற்றினால் நான் கவலைப்பட மாட்டேன். அடுத்த மக்களவைக்கு மிகப்பெரிய வெற்றியுடன் உள்ளே நுழைவேன். இதை என் சபதமாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஏற்கெனவே திட்டமிட்டுவிட்டுச் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். இதன்மூலம் இவர்கள் நாட்டிற்குச் சொல்ல வருவது நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்பதுதான். இத்தகைய நடவடிக்கைகளால் பாஜக - அதானி உறவு குறித்து நான் கேள்வி கேட்பதை நிறுத்திவிட முடியாது. இனிமேல்தான் அதிக வீரியத்துடன் செயல்படுவேன். மக்களவையில் தொடர் கேள்விகள் எழுப்பி முறைகேடுகளை அமல்படுத்துவேன். தற்போதைய சூழலில் நெறிமுறைகள் குழு பரிந்துரை மட்டுமே செய்திருக்கிறது. இதை குளிர்கால கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்வார்கள். எல்லாம் நடக்கட்டும். ஆனால் என்னை ஒன்றும் செய்ய இயலாது. நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்க முயற்சி செய்கின்றனர். முதலில் என்னை வெளியேற்றிப் பார்க்கட்டும். அது நடக்கட்டும். அதன்பிறகு என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பேன்” என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்திருந்தார்.

கிருஷ்ணா நகர் மாவட்ட பிரிவின் தலைவராக மஹுவா நியமனம்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், மஹுவா மொய்த்ரா எதிர்கொண்டிருக்கும் இந்தப் பிரச்னையை திரிணாமுல் காங்கிரஸும் சரி, அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் சரி இதுவரை கண்டுகொள்ளவில்லை. அவரே, தனியாளாகப் போராடி வருகிறார். இதனால் அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படலாம் எனவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எம்.பி. சீட்டுக்கு வழங்கப்படாமல் தவிர்க்கப்படலாம் எனவும் செய்திகள் பரவின. இந்த நிலையில் கிருஷ்ணா நகர் மாவட்ட பிரிவின் தலைவராக மஹுவா மொய்த்ராவை நியமித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆதரவுக் கரம் நீட்டிய திரிணாமுல் காங்கிரஸ்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை ஆற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தை அமைப்புரீதியாக 35 மாவட்டங்களாக பிரித்து திருத்த பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், மஹுவா மொய்த்ராவிற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த தொகுதி அடங்கிய மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதன்மூலம், மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணம் வாங்கிய விவகாரம் தொடர்பாக மஹுவா மொய்த்ராவை, பாஜக நெருக்கடியில் தள்ளிவரும் இக்கட்டான சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவுக் கரம் நீட்டி உள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: "என் கண்களை என்னாலேயே நம்ப முடியல" - 6 பந்துகளில் 6 விக்கெட்... அசத்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்!