மஹுவா மொய்த்ரா ட்விட்டர்
இந்தியா

ED அனுப்பிய சம்மனை நிராகரித்த மஹுவா மொய்தரா.. ‘என்ன நடக்கும் தெரியுமா?’.. மிரட்டும் பாஜக!

கிருஷ்ணா நகர்த் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறி அமலாக்கத் துறையின் சம்மனுக்கு நேரில் ஆஜராக மஹுவா மொய்த்ரா மறுத்துள்ளார்.

Prakash J

சம்மன் அனுப்பிய ED: மீண்டும் ஆஜராகாத மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா மீண்டும் கிருஷ்ணா நகர்த் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார். மொய்த்ராவை எதிர்த்து கிருஷ்ணாநகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்மாதா (ராணி அம்மா) என்று அழைக்கப்படும் அம்ரிதா ராயை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மஹுவா மொய்த்ரா

இந்த நிலையில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானிக்கும் அமலாக்கத்துறை நேற்று (மார்ச் 27) சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் மஹுவா மொய்தரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானி இன்று (மார்ச் 28) அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்று மஹுவா மொய்த்ரா நேரில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம் கிருஷ்ணா நகர்த் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறி அமலாக்கத் துறையின் சம்மனுக்கு நேரில் ஆஜராக மஹுவா மொய்த்ரா மறுத்துள்ளார்.

இதேபோன்று, கடந்த பிப்ரவரி மாதமும் இந்த வழக்கில் ஆஜராக ED சம்மன் அனுப்பியிருந்தது. அதையும் அவர் தவிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? விளக்கம் அளித்த மஹுவா!

இதுகுறித்து இன்று நாடியா மாவட்டத்தில் பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ED அதன் வேலையைச் செய்யும், என்னுடைய வேலையை நான் செய்வேன். சம்மன் அனுப்புவதே ED இன் வேலை. தேர்தல் பிரசாரம் செய்வதே எனது பணி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகத் தற்போது பிரசாரம் செய்வதே எனது வேலை” எனத் தெரிவித்தார்.

மஹுவா மொய்த்ரா

சம்மன் அனுப்பியும் மஹுவா மொய்த்ரா ஆஜராகாதது குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹா, “இவ்வழக்கு தொடங்கியபோது, ​​தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அவர் விசாரிக்கப்படலாம் என்று திரிணாமுல் காங்கிரஸுக்கு தெரியும். ஆனாலும், மஹுவாவை வேட்பாளராகக் களமிறக்கினார்கள். சம்மன்களுக்கு ஆஜராகாமல் தவிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் பார்த்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல்; இது பூதாகரமாக உருவெடுக்கும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து!

மஹுவா மொய்த்ரா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன?

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். அதன் முடிவில் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. பின்னர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து, தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். இதுதொடர்பான வழக்கு, விசாரணையில் உள்ளது. எனினும் இந்த விவகாரத்தில், குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நாளில் இருந்தே மஹுவா மொய்த்ரா அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹுவா மொய்த்ரா

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 23ஆம் தேதி, கொல்கத்தாவில் உள்ள மொய்த்ராவுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சோதனை நடத்தியது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு ஊழல் தடுப்பு குறைதீர்ப்பு மன்றமான லோக்பால் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்பேரில் அவர் மீது கடந்த மார்ச் 21ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: குஜராத்: கைகோர்த்த ஆம் ஆத்மி - காங்கிரஸ்.. பாஜகவை வீழ்த்த வியூகம்!