டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மோதலை கண்டித்து, இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட நிலையில், காவல் துறை வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது வழக்கறிஞர்கள் மீது மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என வழக்கறிஞர் தரப்பினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த தவறியதற்காக சிறப்பு காவல் ஆணையர் மற்றும் கூடுதல் துணை ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்வதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி.கார்கையும் நியமித்தது. அவர் 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டுள்ளது.