இந்தியா

திருப்பதி கோயிலின் பிரம்மோற்சவ திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி கோயிலின் பிரம்மோற்சவ திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

webteam

திருப்பதி கோயிலின் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழா பிரசித்தி பெற்றது. அலங்கரிக்கப்பட்டிருக்கும் மாடவீதியில் சுவாமி உலா வரும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க விழா களைகட்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அதன்படி கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் திருவிழா தொடங்கியது.

இதில் சுமார் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாடவீதியில் வீதி உலா ஏதுமின்றி கோயில் வளாகத்திற்குள்ளேயே பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி தேவியருடன் எழுந்தருளினார். தேவஸ்தான வரலாற்றிலேயே திருவீதி உலா இன்றி கொடியேற்றம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா வரும் 27ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

(கோப்பு புகைப்படம்)

வழக்கமாக புரட்டாசி மாதங்களில் பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரை மேற்கொள்வர். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பிரம்மோற்சவ விழாவில் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனையறியாமல் மலைக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.