பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளம்
இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்| பவன் கல்யாண் - நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே முற்றும் கருத்து மோதல்!

திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பிய நிலையில், மறுபக்கம் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் கருத்து மோதல் வெடித்து வருகிறது.

Prakash J

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு காலத்தில் கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. தவிர, பக்தர்களிடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், இந்த விவகாரத்தினால் கோயிலின் புனிதத்தன்மையை கெடப்பட்டதாகக் கருதி, திருப்பதி கோயிலில் யாக சாந்தி முதலான பல யாகங்களும் சாந்திகளும் நடத்தப்பட்டதுடன், கோமியமும் தெளிக்கப்பட்டு குங்கிலியப் புகை வீசப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘ஏழுமலையானிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கப்போகிறேன்’ எனக் கூறி கடந்த 22ஆம் தேதி (நேற்று முன்தினம்) முதல் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கி உள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அவர், ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.

இதையும் படிக்க: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் முன்னாள் அதிபர்.. காரணம் பேஜரா? சந்தேகத்தை எழுப்பிய எம்பி!

இதுதொடர்பாக பவன் கல்யாண், “திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குக் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு) கலந்ததை அறிந்து நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது. மேலும், இது கோயிலின் நிலப் பிரச்னைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்திய அளவில் கோயில்களில் உள்ள பிரச்னைகளை ஆராய ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது. தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் விவாதம் நடத்த வேண்டும். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய இந்தப் பதிவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்தார். அவர், "மதிப்புக்குரிய பவன் கல்யாண். நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. இதுபற்றி தயவுசெய்து விசாரியுங்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். அதைவிடுத்து ஏன் பொதுமக்களை அச்சுறுத்தி, இந்த விஷயத்தை தேசிய அளவில் ஊதி பெரிதாக்குகிறீர்கள்? நாடு முழுவதும் போதுமான அளவில் வகுப்புவாத பிரச்னைகள் இருக்கின்றன. மத்தியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு நன்றிகள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க: முடா விவகாரம்|“சித்தராமையா மீது நடவடிக்கைஎடுக்க தடையில்லை” நீதிமன்ற உத்தரவால் சூடான கர்நாடக அரசியல்!

இதற்கு பவன் கல்யாண் மறைமுகமாகப் பதிலளித்திருந்தார். அவர், ”நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் உட்கொண்ட பிரசாதம் தூய்மையற்றது என்றால், ஒருவர்கூட பேசக்கூடாதா? அப்படிப் பேசுவது எப்படி மதச்சார்பற்ற அமைப்பைச் சீர்குலைக்கும்? இந்துகளுக்கும் உணர்வுகள் உள்ளது.

நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசக் கூடாது என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம். இந்தச் சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. ஆழமான வலியை தந்துள்ளது. சனாதன தர்மத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்துப் பேசுங்கள்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

பவன் கல்யாணின் இந்தக் கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் பதிலளித்துள்ளார். அவர், "திருப்பதி லட்டு விவகாரத்தில் நான் கூறியதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். திரும்பி வந்ததும் பதிலளிக்கிறேன். நான் திரும்புவதற்குள் எனது சமூக வலைதள பதிவை, புரிந்துகொள்ள முடிந்தால் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா | 19 வயதில் பட்டத்தைத் தட்டிச் சென்ற குஜராத் அழகி!