திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஆண்டு கிடைத்த காணிக்கை வருமானம் 1449 கோடியாக அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், முதலில் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவர். இதைத் தொடர்ந்து பிரசாதமாக லட்டு வாங்குவது என மூன்று விஷயங்களை செய்யத் தவறுவதில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏழுமலையானை வழிபட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கோவில் உண்டியலில் 1449 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் காணிக்கை வருமானமாக கிடைக்கும் என்று தேவஸ்தானம் மதிப்பிட்டு இருந்தது. ஆனால், திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 1361 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் காணிக்கையான செலுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.. தொடர்ந்து பத்து மாதங்கள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்தது. இது தேவஸ்தான வரலாற்றில் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் இதுவரை உண்டியல் காணிக்கை வருமானமாக ரூ. 1361 கோடி ரூபாயை நெருங்கிவிட்டது. இன்னும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் மீதமுள்ளன. எனவே அடுத்த மூன்று மாதங்களில் கிடைக்க இருக்கும் காணிக்கை வருமானத்தையும் சேர்த்து கணக்கிட்டால் தேவஸ்தானத்தின் காணிக்கை வருமானம் நடப்பு நிதியாண்டில் 1700 கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.