இந்தியா

திருப்பதி லட்டுக்கு கிடைத்தது லைசென்ஸ்

திருப்பதி லட்டுக்கு கிடைத்தது லைசென்ஸ்

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்திற்கு திருமலை தேவஸ்தான நிர்வாகம் லைசென்ஸ் பெற்றுள்ளது.

பிரசித்தி பெற்ற திருப்பதி எழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக 300 ஆண்டுகளுக்கு முன்பு இனிப்பு பிரசாதமாக பூந்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் வடை, அப்பம், ஜிலேபி வழங்கப்பட்டு வந்தது. 1803 ஆண்டு அப்போதைய மதராஸ் பிரிட்டிஷ் அரசு பிரசாதத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு 1940 ஆண்டு பூந்திக்கு பதில் லட்டு பிரசாதமாக தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 1984 ஆண்டு வரை விறகு அடுப்பில் தயார் செய்யப்பட்டு வந்த லட்டு பிரசாதம் அதன் பிறகு கேஸ் அடுப்பில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் லட்டு, உணவாக உட்கொள்ளப்படுவதால், அதற்கு இந்திய உணவு பாதுகாப்பு தரநிலை ஆணையத்தில் லைசன்ஸ் பெற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கர்நாடக மாநிலம் ஹல்சூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி எப்.எஸ்.எஸ்.ஐ. ஆணையத்தில் இதுதொடர்பான விவரங்களை கேட்டு இருந்தார்.

இதற்கு சென்னையில் உள்ள தென்னிந்திய உணவு பாதுகாப்பு தரநிலைகள் ஆணையத்தின் அதிகாரி கண்ணன் அளித்துள்ள தகவலின்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளைக்கு 45 மெட்ரிக் டன் எடையுள்ள மூலப்பொருட்கள் மூலம் லட்டு தயார் செய்ய அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், 20 டன் எடையுள்ள மூலப்பொருள் மூலம் வடை, ஜிலேபி, அப்பம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்து விற்பனை செய்ய அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வரையும் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லைசன்ஸ் ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்ளும் விதமாக உள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு தரநிலை ஆணையம் தெரிவித்துள்ளது.