திருப்பதி கோப்புப் படம்
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயில்| நாளை விஐபி தரிசனம் ரத்து!

Prakash J

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு ஜெகன் மோகனின் அரசு காலத்தில் கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது.

திருப்பதி லட்டு விவகாரம்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்திருந்தார். அதேநேரத்தில், இதுதொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (அக்டோபர் 1) விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் சுமார் 4 மணி நேரம் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, சிபாரிசு கடிதத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கான தரிசனம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.