இந்தியா

திவ்ய தரிசனமும் கிடையாது.. திருப்பதி லட்டும் கிடையாது...!

திவ்ய தரிசனமும் கிடையாது.. திருப்பதி லட்டும் கிடையாது...!

webteam

திருப்பதியில் வார இறுதி நாட்களில் திவ்ய தரிசனம் டிக்கெட் வழங்குவதையும் இலவச லட்டுக்களை‌ வழங்குவதை நிறுத்தவும் கோ‌வில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதையில் பாத யாத்திரையாக வரும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்‌நிலையில் வார இறுதி நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து, 40‌ ஆயிரமாக உயர்ந்துள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திவ்ய தரிசனம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்திற்கான வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டும் நிறுத்தப்படும் எ‌ன தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்கள் வேண்டுதல்படி பக்தர்கள் திருமலைக்கு பாத யாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக மலைப்பாதையில் திவ்ய தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் வழியாக தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் 1 இலவச லட்டு, 2 லட்டுகள் சலுகை விலையில் 20 ரூபாய்க்கும், கூடுதலாக 2 லட்டுகள் 25 ரூபாய்க்கும் என 5 லட்டுகள் வழங்கப்படுகிறது. மலைப்பாதையில் பாத யாத்திரையாக வரும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு கடந்த 2014 ஜனவரி மாதம் மாதம் முதல் அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு தொடங்கி வைத்தார்.

வழக்கமாக மலைப்பாதையில் 15 ஆயிரம் 20 ஆயிரம் பக்தர்கள் வந்த நிலையில் தற்போது சாதாரண நாட்களில் 30 ஆயிரம் பக்தர்களும் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இதனால் திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நேரங்களில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளும், கேட் மீது ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வரிசைகளை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த வாரம் முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திவ்ய தரிசனம் டிக்கெட் ரத்து செய்து மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்தாலும் இலவச தரிசனத்திற்காண வரிசையில் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு மூலம் ஒரு நாளைக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாகவும் எனவே திவ்ய தரிசனம் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய இலவச லட்டு வழங்குவதும் நிருத்தப்படவுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சலுகை விலையில் 20 ரூபாய்க்கு 2 லட்டுகளும், 25 ரூபாய்க்கு 2 லட்டுகளும் கூடுதலாக வழங்கப்படுவது வழக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.