தெலுங்கு சினிமாக்களில் சில படங்களில் மசாலா அதிகமிருக்கும். ஹீரோ எத்தனை பேரை பறந்து பறந்து அடித்தாலும், எத்தனை மட்டமான வசனங்களை படு வீராப்பாக பேசினாலும் லாஜிக் என்ற கேள்விக்கு அத்தகைய படங்களில் இடமில்லை. எல்லா மொழி படங்களில் இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இது சினிமா வரையில் மட்டும் இருக்கும் வரை கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, தனது ஹீரோ பிம்பத்தை அப்படியே கொண்டுவந்தால், எதிரிலிருப்பவர்களை மட்டமாக நடத்தினால், ‘தான்தான் அனைத்திற்கும் காப்பான்’ என்பதுபோல் நடந்துகொண்டால் விமர்சனங்களை சந்தித்துதான் ஆக வேண்டும். இந்த ‘தான்’தோன்றித்தனமாக நடக்கும் தெலுங்கு நடிகர் கம் அரசியல்வாதி என்றால் அது ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.
ஏன் இத்தனை காட்டமான விமர்சனம், புறாவுக்கெல்லாம் போரா? என யோசிக்கிறீர்களா? இப்படித்தான் கார்த்தியின் லட்டு குறித்த கருத்துக்கு பவன் கல்யாணின் எதிர்வினை சம்பந்தமில்லாமல் இருந்தது.
முதலில் என்ன நடந்தது என பார்க்கலாம்.. மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பிரேம் குமார் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது தொகுப்பாளர் கார்த்தியிடம், உங்களுக்கு லட்டு வேணுமா? என கேட்டார். அதற்கு கார்த்தி, “இப்போது லட்டு குறித்து பேசக் கூடாது. உணர்வுப்பூர்வமான (sensitive) விவகாரம், நமக்கு வேண்டாம்” என்று சிரித்தப்படி கூறினார். எந்த கிண்டலும் செய்யவில்லை.
மறுபுறம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக, நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் 11 நாள் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அப்போது பத்திரிக்கையாளரிடம் பேசிய அவர், சினிமா நிகழ்வில் லட்டுவை sensitive என கூறியுள்ளார்கள். இனி ஒருமுறை அப்படி சொல்லாதீர்கள். சனாதன தர்மம் என்று வரும்போது ஒவ்வொரு வார்த்தையையும் 100 முறை யோசித்து பேசுங்கள்” என பேசி இருந்தார்.
லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்தது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களது நம்பிக்கை சார்ந்த ஒன்றை புண்படுத்தக்கூடிய எந்த ஒரு விஷயங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அது, மக்களது நம்பிக்கையில், அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைக்கும் அயோக்கியத்தனம். குற்றமிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பவன் கல்யாண் செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம்.
sensitive என்றால் உணர்வுப் பூர்வமான ஒன்று, மிக முக்கியமான ஒன்று என்றுதான் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். உண்மையிலேயே sensitive என்பதற்கு மேற்கண்டதுதான் பொருளும் கூட. ஆனால், sensitive என்ற வார்த்தையை சொல்லாதீர்கள் என்கிறார் பவன் கல்யாண். லட்டு விவகாரத்தை சனாதன தர்மம் என்கிறார்.
திருப்பதி லட்டு சர்ச்சை கலப்படம் என்ற தன்மையில் ஆரம்பித்து இருந்தாலும் தற்போது அது பல வடிவம் எடுத்துள்ளது. ஆளும் சந்திரபாபுவின் கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் கட்சிக்கும் இடையிலான அரசியல் யுத்தமாக ஒரு புறம் பார்க்கப்படுகிறது.
அதனையெல்லாம் தாண்டி கோயிலை அரசு தலையீட்டில் இருந்து முற்றிலுமாக விளக்கி தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த விஷயத்தை வலதுசாரிகளின் கருத்தின் பக்கம் பவன் கல்யாண் தள்ளிவிட்டிருக்கிறார். யாகம் இருப்பது, புனிதப் படுத்துகிறோம் என்ற போர்வையில் பல விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
முதலில் லட்டுவில் விலங்குக் கொழுப்பு இருந்த விவகாரம் முற்றிலும் நிர்வாகம் சார்ந்து நடந்த தவறு. ஏனெனில், தரமான நெய் வேண்டும், பக்தர்களது நம்பிக்கை சார்ந்த விஷயம். வியாபாரத்திற்கு இதில் இடமில்லை என்று நிர்வாகம் கருதி இருக்குமானால் ஆவின், நந்தினி, அமுல் போன்று பிற மாநில அரசுகள் நடத்தும் நிறுவனங்களில் இருந்து நெய் கொள்முதல் செய்திருக்கலாம். அதை விடுத்து ஒரு கிலோ நெய்யை ரூ. 319 க்கு வாங்க திருப்பதி கோயில் நஷ்டத்திலா இயங்கிறது. குறைந்த விலைக்கு சுத்தமான, தரமான நெய் கிடைக்குமா என்ற கேள்வி கோவில் நிர்வாகத்தில் இருப்பவர்களில் ஒருவருக்கு கூட எழவில்லையா? இது பவன் கல்யாணுக்கும் தெரியாதா?
இதில் அரசியல் செய்ய என்ன தேவை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. பவன் கல்யாண் எனும் தனி ஒரு நபர் 11 நாட்கள் விரதம் இருப்பது, கோயில் படிகளை பக்தர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்வது போன்ற விஷயங்கள் முழுக்க முழுக்க அவரது அரசியலுக்கு பயன்படும் ஆயுதம் என்பதைத் தாண்டி, பக்தி சார்ந்து இதில் ஏதொன்றும் இல்லை.
இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷனா வாரியத்தை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சனாதன தர்மத்தை எந்த வடிவத்திலும் இழிவுபடுத்துவதை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் துணை முதலமைச்சர். நீங்கள் செய்ய வேண்டியது நிர்வாகம் சார்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எப்படி எடுப்பது? இனியொருமுறை இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது எப்படி? என்கிற விஷயங்களைத் தானே மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, “சனாதன தர்மம் மிகவும் முக்கியமானது, ஒவ்வொரு இந்துவும் இதில் பொறுப்பேற்க வேண்டும்” என்றெல்லாம் பேசி, மற்ற மதங்களில் இதுபோல் நடந்தால் போராட்டம் நடைபெறும் என்று கூறி, மக்களை மதம் சார்ந்து அணி திரட்டுவது எந்தவகையில் சரி.
தனது திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த கார்த்தி, லட்டு குறித்த கேள்வியை சரியாகத்தானே கையாண்டார். இதற்கும் மேல் எப்படி அதைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், அதையும் அரசியல் ஆக்குவதை என்ன செய்வது.