இந்தியா

டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் கைது

டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் கைது

webteam

டிக்டாக் பிரபலம் சோனாலி போகட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

சோனாலி போகட் கடந்த ஆண்டு ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். மேலும் இவர் ஒரு டிக்டாக் பிரபலம். சமீபத்தில் விவசாயச் சந்தையை ஆய்வு செய்த இவர், அவரிடம் புகார் அளித்த விவசாயிகளின் புகார் விண்ணப்பங்களுடன் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்திக்கச் சென்றார். அங்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவர் திடீரென அவரை தனது செருப்பால் சரமாரியாக அடித்தார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இது குறித்து சுல்தான்சிங் கூறும் போது “சோனாலி என்னிடம் நான் யாரென்று தெரிகிறதா எனக் கேட்டார். அதற்கு உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் ஆதம்பூர் தேர்தலில் போட்டியிட்டவர் எனக் கூறினேன். மேலும் நான் விவசாயிகளின் புகார்கள் குறித்த விவரங்களை வாங்கி வைத்துள்ளேன் என்றும் அது குறித்த நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றேன்.

உடனே அவர், ஏன் ஆதம்பூர் தேர்தலில் என்னை எதிர்த்தாய் எனக் கேட்டார். அதற்கு நான் எனக்கு அங்கு குடும்பம் இல்லை என்றும் எப்போதோ நடந்ததை தற்போது ஏன் நீங்கள் பேசுகிறீர்கள் எனவும் கூறினேன். அதற்கு அவர் நீ என்னை துஷ்பிரயோகம் செய்து விட்டாய் என்றார். அதற்கு நான் உங்களை அப்படி செய்யவில்லை எனக் கூறிக் கொண்டு இருக்கும்போதே அவர் செருப்பால் அடிக்கத் தொடங்கி விட்டார்” என்றார்.

இந்தச் சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோனாலி போகட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் சுல்தான் சிங், சோனாலி போகட் மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் டிக்டாக் பிரபலமான சோனாலி போகட், அரசாங்க அதிகாரியை அறைந்ததற்காக இன்று ஹிசாரில் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹிசாரில் உள்ள நீதிமன்றத்தில் அவர் உடனடியாக ஜாமீன் பெற்றார். சோனாலி போகட் மீது கலவரம் ஏற்படுத்துதல், சட்டவிரோத செயலில் ஈடுபடல், அரசு ஊழியரை கடமை செய்யவிடாமல் காயப்படுத்தியது, தடுத்தல், மிரட்டியது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டதாக ஹிசார் எஸ்.பி. கங்கா ராம் புனியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.