இந்தியா

60 லட்சம் வீடியோக்களை நீக்கியது டிக் டாக்!

60 லட்சம் வீடியோக்களை நீக்கியது டிக் டாக்!

webteam

இந்தியாவில், சட்டத்துக்கு புறம்பாகவும், ஆபாசமாகவும் பதிவிடப்பட்டிருந்த 60 லட்சம் வீடியோக்களை டிக் டாக் செயலி நீக்கியுள்ளது.

சீன நிறுவனமான டிக்டாக் மற்றும் ஹலோ ‌ஆகிய செயலிகள் தேச விரோத செ‌யல்களுக்கு பயன்படுத்தப்படு‌வதா‌‌க ஆர்எஸ்‌எஸ் ‌அமைப்பி‌ன் துணை ‌அமைப்பான ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச், பிரத‌மரிடம் புகார் அளித்‌தது.‌ இதையடுத்து அந்த செயலிகளின் நிர்வாக‌ ங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. ‌அதில் தேச விரோத பதிவுகளை இடும் மையமாக மாறி விட்டது‌‌ என்ற புகாரு‌க்கு வி‌ளக்கம் தருமாறு கோரப்பட்டது. 

மேலும், இந்திய பயனாளர்களின் தகவல்களை இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் எந்த வெளிநாட்டு அரசுக்கோ, மூன்றாம் தரப்புக்கோ அளிக்க மாட்டோம் என்று உத்திரவாதம் அளிக்கத் தயாரா? பொய் செய்திகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது உட்பட 24 கேள்விகளை கேட்டது. இதற்கு சரியான பதிலை தரவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என்று எச்சரிகையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு எதிராக, சட்டத்திற்கு புறம்பாகவும், ஆபாசம‌‌வும் பதிவிடப் பட்டிருந்த 60 லட்சம் வீடியோக்களை டிக் டாக் செயலி நீக்கியுள்ளது. 

இதுபற்றி அந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர் சச்சின் சர்மா கூறும்போது, ‘’திறமையையும் படைப்பாற்றலையும் வெளிக் கொணர்வதே டிக் டாக் செயலியின் நோக்கம். பயனாளர்களுக்கு பாதுகாப்பான, நேர்மறையான சூழலை கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். அதை  மீறும் எந்த உள்ளடக்கத்தை அங்கீகரிக்க மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.