மகாராஷ்டிரா வனப்பகுதியை சேர்ந்த புலி ஒன்று தனக்கேற்ற துணையை தேடி சுமார் 2000 கி.மீ பயணித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள திப்பேஷ்வர் வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்கு வசிக்கும் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் ஜிபிஎஸ் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கு வசித்த புலி ஒன்று தனக்கு ஏற்ற ஜோடியை தேடி நடை பயணத்தை தொடர்ந்திருக்கிறது. காடு, மேடு, மலை, குழாய்கள் என பல்வேறு பகுதிகளில் அந்தப் புலி திரிந்துள்ளது.
புலியின் இந்தப் பயணத்தை வனத்துறையினர் ஜிபிஎஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அதேசமயம் இந்தப் புலி தனது பயணத்தின்போது யாரையும் தாக்குவதோ அல்லது அச்சுறுத்துதோ என எந்த அசம்பாவிதத்தையும் செய்யவில்லை. மேலும், பகலில் ஓய்வெடுத்துவிட்டு இரவில் மட்டும் தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறது. இதனால் யார் கண்ணிலும் படமால் இந்தப் புலி பயணித்திருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் புலியின் ஜோடி தேடல் பயணம் இன்றும் ஓயவில்லை.
2000 கி.மீ சுற்றி திரிந்தாலும் மகாராஷ்டிராவை விட்டு இந்தப் புலி வெளியே செல்லவில்லை. இறுதியில் மகாராஷ்டிராவின் த்யான் கங்கா வனப்பகுதியில் வந்து தங்கியுள்ளது. இந்த செய்திகளை வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இந்த செய்தி பல்வேறு ஊடகங்கள் மூலம் தற்போது பரவி வருகிறது. இதனால், இந்தப் புலி தற்போது பிரபலமாகி வருகிறது. சிலர் அதிகாலை நேரங்களில் இதைக் கண்டதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பலரும் அந்தப் புலிக்கு சரியான ஜோடியை தேடித்தாருங்கள் என சமூக வலைத்தளங்களில் பரிந்துரைத்துள்ளனர்.
புலிகள் மட்டுமல்ல வனத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுமே மனிதர்களைப் போல காதல், பாசம், பசி, வசிப்பிடம், உணர்வு என அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அவற்றின் வாழ்விடத்தை மனிதர்கள் பறித்துக்கொள்வதுடன், அவற்றை அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக அலைய விடுவது கொடுமையிலும் கொடுமை என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எந்தப் புலிகளும் மனிதர்களை தேடி வந்து உண்பதில்லை. அவை மனிதர்களை தாக்குவது குறித்து பார்ப்பதற்கு முன்பு, அவற்றின் வாழ்வில் மனிதர்களால் ஏற்பட்ட தாக்கங்களை முதலில் பார்க்க வேண்டும். தற்போது 2000 கி.மீட்டர் ஜோடியை தேடி தேடி பயணித்திற்கும் இந்தப் புலி கூட தான் செல்லும் வழியில் யாருக்கும் இடையூரு விளைவிக்கவில்லை. ஆனால், தனது அன்பினை பகிர்ந்துகொள்ள அந்தப் புலிக்கு 2,000 கி.மீ அலைச்சலிலும் ஒரு ஜோடி கிடைக்கவில்லை. இந்த நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வி மறுக்க முடியாத ஒன்று..?