இந்தியா

10 வருடங்கள் கழித்து ‘வீர் சக்ரா’ வீரருக்கு கிடைத்த உரிய கவுரவம் 

webteam

‘வீர் சக்ரா’ விருது பெற்ற சத்பால் சிங்கிற்கு உதவி காவல் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

1999ஆம் ஆண்டு கார்கில் எல்லையை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததால் இந்தியா அதன் மீது போர் தொடுத்தது. இந்தப் போரில் இந்திய ராணுவம் ‘ஆப்ரேஷன் விஜய்’ என்ற தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ஆபரேஷனின் போது டைகர் ஹில் பகுதியை இந்தியா மீட்க முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சத்பால் சிங். இவர் அந்தப் போரின் போது பாகிஸ்தானின் கர்ணல் ஷேர் கானை சுட்டு வீழ்த்தினார். இவரின் இந்தச் செயலுக்கு இந்திய அரசு ‘வீர் சக்ரா’ விருதை வழங்கி கவுரவித்தது. 

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் முன்னாள் ராணுவ வீரருக்கான இடம் மூலம் பஞ்சாப் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். எனினும் அவருக்கு டிராஃபிக் கான்ஸ்டபிள் வேலையை கிடைத்தது. இதனையடுத்து அவர் சங்ரூர் மாவட்டத்திலுள்ள பவானிகர் பகுதியில் டிராஃபிக் கான்ஸ்டபிளாக பணிப் புரிந்து வந்தார். இதுகுறித்து அவர், “நான் பஞ்சாப் காவல்துறையில் சேர்ந்து தவறான முடிவை எடுத்துவிட்டேன். ஏனென்றால் ‘வீர் சக்ரா’ விருது பெற்றதற்கான உரிய அங்கிகாரம் எனக்கு கிடைக்கவில்லை. மற்ற விளையாட்டுகளில் பதக்கம் வென்றவர்களுக்கு காவல்துறையில் உயரிய பதவிகள் அளிக்கப்படுகின்றன” எனக் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில் இன்று பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் சத்பால் சிங்கிற்கு உதவி காவல் ஆய்வாளராக பணி உயர்வு அளித்து உத்தரவிட்டுள்ளார். அவர் கார்கில் போரில் செய்த வீர செயலை பாராட்டும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.