இந்தியா

தொடர்ந்து பலியாகும் தேசிய விலங்கு - 6 மாதத்தில் 67 புலிகள் பலி

webteam

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் 67 புலிகள் இறந்திருக்கும் அதிர்ச்சித் தகவலை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் வெளியிட்டுள்ளது. 

உலகிலுள்ள புலிகளின் 60 சதவிகித வாழ்விடமாக இந்தியா இருந்தாலும், அதன் வாழ்விடத்தை சுருக்குவது, சீனா மற்றும் ஆசிய நாடுகளில் புலிகளின் உறுப்புகளுக்கான
டிமான்ட் ஆகியவையே அவை வேட்டையாடப்பட காரணம் என்கிறார் சர்வதேச வனவிலங்கின நிதி அமைப்பின் பொருளாளர் தியோடர் பாஸ்கரன். இதனால் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. 6 மாதங்களில் 67 புலிகள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் 14 புலிகள் இறந்துள்ளன. வனவிலங்கின ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறை இடையேயான ஒற்றுமையின்மையும் புலிகள் இறப்புக்கு காரணம் என்பது தியோடர் பாஸ்கரனின் கருத்து. இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 500 புலிகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலையில், 2015-ம் ஆண்டு இறந்த புலிகளின் எண்ணிக்கை 80. நடப்பாண்டிலோ 6 மாதத்திற்குள்ளாகவே 67 புலிகள் இறந்திருப்பது வன விலங்கின ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையெல்லாம் வைத்து, அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் புலியையும் சேர்த்துள்ளது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன்.