மோடி, ராகுல் எக்ஸ் தளம்
இந்தியா

"வன்முறை, வெறுப்புக்கு இடமில்லை"| பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீச்சு - ராகுல் காந்தி கண்டனம்!

வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Prakash J

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்றாலும், பாஜக தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், அவர் தாம் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசி தொகுதிக்கு நேற்று (ஜூன் 19) சென்றிருந்தார். பிரதமர் மோடி காரில் வாரணாசியில் ஊர்வலமாக சென்றார். அப்போது, காரின் முன்னிருக்கையில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த நிலையில் சாலையின் இருபுறமும் பாஜகவினர் நின்று அவரை வரவேற்றனர்.

இந்த வேளையில் திடீரென்று பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதையடுத்து பாதுகாவலர் அந்தச் செருப்பை காரில் இருந்து எடுத்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீசியது யார், பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. என்றாலும் இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இணையதளங்களில் இந்த சம்பவம் வைரலான நிலையில், பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே தனது எக்ஸ் பக்கத்தில், “மோடியின் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தவறுதான். ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்கள், தங்கள் பிரதிநிதிமீது எவ்வளவு அதிருப்தி அடைந்திருப்பர் என புரிந்துகொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!