உயிரிழந்த பெண்கள்  PT WEB
இந்தியா

ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்த 7 பெண்கள்; அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி பின்னணி?

கர்நாடகாவில் ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல் ராஜ்

கர்நாடக மாநிலம், துமகூர் மாவட்டம் அருகே உள்ள பாவகடாவில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குக் கடந்த 22ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு, கர்ப்பப்பை பிரச்சினை, டெலிவரி என அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூன்று பெண்கள் கடந்த ஐந்து நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மூன்று பெண்களின் உயிரிழப்புக்கு நியாயம் வழங்கக் கோரி, பாவகடா செல்லும் பெல்லாரி நெடுஞ்சாலையில் உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர், "பாவகடா அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி 7 பெண்களுக்கு டெலிவரி, குடும்ப கட்டுப்பாடு, கர்ப்பப்பை பிரச்சினை உள்ளிட்ட காரணமாக ஒரே நாளில் ஏழு பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

இதில் மூன்று பெண்கள் கடந்த ஐந்து நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட வீரக்கொண்டி கிராமத்தைச் சேர்ந்த அனிதா அறுவை சிகிச்சை செய்து கொண்ட, அதே நாளில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து ராஜவந்தி பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்கப்பட்டது. பிரசவம் ஆன அஞ்சலி உடல்நிலை மோசமானதால், அந்தப் பெண்ணை பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார்.

அதே போல், பியடனூர் கிராமத்தைச் சேர்ந்த நரசம்மா என்ற பெண் கர்ப்பப்பை பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இவருடைய உடல் நிலையும் மோசமான நிலையில், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவரும் 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மூன்று பேருமே கடந்த 22 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இவர்கள் உயிரிழப்புக்கு நியாயம் வழங்க வேண்டும்" என்றார்.

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.