கர்நாடகாவில் உள்ள 3 மாடி கட்டடம் ஒன்று கண் இமைக்கும் நொடியில் சரிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது பங்காரபேட். இங்குள்ள தண்டு சாலைப்பகுதியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இதில் மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல் இரண்டு தளங்கள் வாடகைக்கு விடப்பட்ட நிலையில், கீழ்த்தளத்தில் உரிமையாளர் ராஜ்குமார் வசித்து வந்துள்ளார்.
கட்டடம் கட்டி, 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், கீழ்த்தளத்தில் பராமரிப்புப் பணிகள் செய்ய முடிவெடுத்துள்ளார் ராஜ்குமார். அவர் அறிவுறுத்தலின்பேரில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், தவறுதலாக கட்டடத்தின் முக்கிய தூணை ஊழியர்கள் இடித்துள்ளனர். இதனால், திடீரென கட்டடம் சீட்டுக்கட்டைப்போல இடிந்து விழுந்துள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்டடம் இடிந்து விழப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். மேலும், மாடிகளில் வசித்து வந்த குடும்பத்தினர் முன்கூட்டியே அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தடுக்கப்பட்டது.
கட்டடம் இடிந்து விழுந்ததில், அதன் எதிரே இருந்த பள்ளி வளாகமும் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்டடத்தின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டநிலையில், இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.