உத்தரபிரதேச மாநிலம் பிலிபிஃட் மாவட்டத்தில் புலி ஒன்று ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்குவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிஃட் மாவட்டத்தில் உள்ள கஜ்ராலா பகுதியில் நேற்று காலை புலி ஒன்று நுழைந்தது. ஊருக்குள் நுழைந்த அந்தப் புலி ராம் பகதுர், உஜாகர் சிங் மற்றும் லால்டா பிரசாத் ஆகிய 3 நபர்களை வெவ்வேறு நேரத்தில் தாக்கியது. இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விவசாயி மிலப் சிங் கூறும் போது “ புலி மூன்று நபர்களை தாக்கியுள்ளது. நேற்று காலை காலையில் எனது வீட்டருகே அமர்ந்திருந்த புலியானது, அப்பகுதியை கடந்து செல்பவர்களை தாக்கியது. தகவலறிந்த காவ்வல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு வந்தனர்” என்றார்
அதன் பின்னர் வனத்துறையின் டிராக்டர் மேல் தாவி ஏறும் அந்தப் புலி அப்பகுதியில் வருபவர்களை தாக்கியுள்ளது. இதனையடுத்து மக்கள் கூட்டத்தைக் கண்ட புலி டிராக்டர் கீழே நுழைந்து காட்டுக்குள் தப்பி ஓடியது. எதிர்பாராத விதமாக ஊருக்குள் புலி நுழைந்ததால் புலியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புகாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். புலி ஊருக்குள் நுழைந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.