இந்தியா

தானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம்

தானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம்

webteam

 ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எதிர்பாராதவிதமாக தானாகவே மூடிக்கொண்ட காரில் மூன்று சிறுமிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்புலாபாடு மண்டலில் உள்ள ரெமல்லே கிராமத்தில் சிவப்பு நிறக் காருக்குள் சிறுமிகள் உயிரிழந்த தகவலை அவர்களது பெற்றோர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர் அந்த காரில் நினைவிழந்த நிலையில் இருந்த அஸ்பனா, யாஸ்மின் மற்றும் பர்வீன் ஆகிய மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.

அஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளான அவர்களுக்கு 6 முதல் 8 வயது வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. "வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மூவரும், அங்கு நின்றுகொண்டிருந்த காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர். அதைத் தொடர்ந்து காரின் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன. பின்னர் சுவாசிக்க சிரமப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடைசி நேரத்தில் கதவுகளைத் திறக்க சிறுமிகள் போராடிய தடயங்களும் உள்ளன" என காவல்துறை ஆய்வாளர் ரமணா தெரிவித்தார்.

சிறுமிகளைத் தேடி பல இடங்களுக்கு அலைந்த பெற்றோர், நினைவிழந்த நிலையில் மூன்று சிறுமிகளும் காருக்குள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காரின் உரிமையாளர் கதவுகளை மூடவில்லை என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.