இந்தியாவில் 85 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகளாக உள்ளனர். அவர்கள் சில பைகள் நெல் அல்லது கோதுமையை விற்க வேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சந்தை அல்ல, நாடு முழுவதும் ‘பல ஆயிரம் சந்தைகள்’ தேவை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவான விளம்பரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே சந்தை’ தான் விவசாயிகளுக்கு சுதந்திரம் தரும் என்று அந்த விளம்பரத்தில் ஒரு வரி கூறுகிறது. இந்தியாவில் 85 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகளாக உள்ளனர். அவர்கள் சில பைகள் நெல் அல்லது கோதுமையை விற்க வேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சந்தை அல்ல, நாடு முழுவதும் ‘பல ஆயிரம் சந்தைகள்’ தேவை
பெரிய கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆயிரக்கணக்கான உழவர் சந்தைகளை உருவாக்க இந்த மசோதாக்கள் என்ன நடவடிக்கை எடுக்கும்? ஆயிரக்கணக்கான சந்தைகள்தான் விவசாயிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றால், அந்த உற்பத்தி பொருளுக்கான விலை “குறைந்தபட்ச ஆதார விலை” விடக் குறைவாக இருக்கக்கூடாது என்று இந்த மசோதாக்களில் ஏன் ஒரு விதி இல்லை?” என்று தெரிவித்துள்ளார்