இந்தியா

மும்பையில் குவிந்த விவசாயிகளுடன் முதலமைச்சர் பட்னாவீஸ் பேச்சுவார்த்தை

rajakannan

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குழுவுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அகில இந்திய கிஷான் சபா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி நாசிக்கில் இருந்து மும்பையில் உள்ள மராட்டிய சட்டசபை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணியை தொடங்கினர். இதில் 25 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கு கொண்டு உள்ளனர். ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக மாநில அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இது தங்களுக்கு வாழ்வா? சாவா? பிரச்னை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பேரணியாக வரும் விவசாயிகள் சட்டசபையை (விதான் பவன்) முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் பேரணி நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்தது. தற்போது மும்பை தானே நெடுஞ்சாலையில் விவசாயிகள் பேரணி சென்று கொண்டிருக்கிறது.

 முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், வன உரிமை சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 நாட்களில் சுமார் 180 கிலோமீட்டர் தூரம் விவசாயிகள் பேரணியாக நடந்து வந்துள்ளனர். செல்லும் வழி நெடுகிலும் இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் இணைந்த வண்ணம் உள்ளனர்.  

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா நிதி அமைச்சருமான சுதிர் முங்கந்திவார் கூறுகையில், ‘முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய குழுக்களை சந்திப்பு பேசுவார். முந்தைய அரசாங்கங்கள் விவசாயிகள் மீது அக்கறையில்லாமல் செயல்பட்டுள்ளதுதான் அனைத்து பிரச்னைக்கும் காரணம்’ என்றார். அகில இந்திய கிஷான் சபா அமைப்பின் பொதுச் செயலாளர் அஜித் நாவலே கூறுகையில், ‘அரசு உறுதியான வாக்குறுதிகளை எழுத்துபூர்வமாக வழங்காவிட்டால் விதன் பவன்(சட்டசபை) நோக்கிய பேரணி திட்டமிட்டபடி நடைபெறும்’ என்றார். 

விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தாண்டி ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் மும்பையில் குவியும் வாய்ப்புள்ளதால் போக்குவரத்து ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். சாலைகள் எதுவும் மூடப்படவில்லை என்றும் வழிகளும் மாற்றப்படவில்லை என்றும் மும்பை போக்குவரத்து துணை கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். மும்பையில் புறநகர் பகுதியான சியோனில் உள்ள கேஜே.சோமையா மைதானத்தில் நேற்றிரவு விவசாயிகள் தங்கினர். இன்று காலை மீண்டும் பேரணியை தொடங்கவுள்ளனர்.